என் மனசாட்சியிடம் திருடியது

என் பெயர். "பிரகாஷ்". படித்தது "திருநெல்வேலி" யில்..வேலை "சிங்கார சென்னை" யில்.... தற்சமயம் "Tokyo" வில். "என்னை சுற்றி .. நம்மை சுற்றி.. நடந்தவை, நடப்பவை பற்றிய அலசல் .. இந்த வலைப்பதிவு...

Saturday, January 03, 2009

இரட்டைவட சங்கிலி

ரோஜாவில் வரும் சுந்தரபாண்டியபரத்தை போல இதுவும் அழகான கிராமம் இது. நீட்டமான அஹ்ரகாரம் , தெருவின் இரண்டு பக்கத்திலும் வரிசையாய் வீடுகள், வீடுகளுக்கு பின்னால் ஓடும் வாய்க்கால், சிலுசிலு குற்றாலக்காற்று, எங்கேயும் பச்சபசேல் என ரம்யமான சூழல் அது.

அலமேலு அம்மாள் 71வயது ஆனாலும் 17வயது சுறுசுறுப்பு. அகத்தின் அழகு முகத்தில் தெரியும், இது அலமேலுஅம்மாளுக்கு அப்படியே பொறுந்த்தும். கருணையே வடிவான கண்கள், துறுதுறுபேச்சு, ஊருக்கே அலமேலு அம்மாளின் நல்ல குணம் பரிச்சயமானது. பள்ளிக்கூட வயசுல வீட்டுல யாரும் இல்லைஎன்றாலும் அலமேலு அம்மாள் காலை 4 மணில இருந்து மதியம் 2 மணிக்கு அப்பளம் எண்ணிவைக்கற வரை அலமேலு அம்மாள் வாசப்படியில் இருந்து வைக்கற்கட்டு வரை குறுக்காலும் நெடுக்காலும் 10 முறை நடந்து விடுவாள்.

காலைல 4 மணிக்கு மாடு சத்தம் கேட்டால் கொல்லப்புறத்துல முருகேசன் வேலைக்கு வந்துட்டான் என்று அர்த்தம். முருகேசன் மாட்ட குளுப்பாட்டறதுல இருந்து, பால் கறந்து, சாணி அள்ளி, புண்ணாக்குவைச்சு, வைக்கல் காட்டி எல்லாவேலையும் செய்வான்.முருகேசன் அப்பா மாயாண்டி காலத்துல இருந்தே நாராயணஜயர்(அலமேலு அம்மாளின் மறுபாதி)வீட்டில் தான் வேலைபார்த்து வருகின்றனர்.அலமேலு அம்மாள் தன் ஜந்து மகன்களையும் சேர்த்து முருகேசனையும் ஒரு மகனாகவே எண்ணி பாவித்து இருந்தாள்.முருகேசனும் வீட்டிற்குள் சகஜமாக வருவதும் போவதுமாக இருந்தான்.

இப்படி முருகேசன் நாராயணஜயர் வீட்டிற்கு வந்து போவது அஹ்ரகாரத்து பெருசுகளுக்கு வெகுநாளாக நெருடலாக இருந்தாலும் நாராயணஜயரை எதிர்த்து பேச யாருக்கும் தைரியம் இல்லை.ஒரு நாள் கிச்சாவை ஏத்தி விட்டது அனந்துவும் அவர் சகாக்களும்.கிச்சா-45வயதான ஒரு ஒண்டிக்கட்டை. ஒரு வகையில் அலமேலு அம்மாளுக்கு ஒண்ணு விட்ட தம்பி முறை கூட.சமையல் வேலையில் 15 நாளைதவிர அலமேலு அம்மாளின் கையில் தான் சாப்பாடு. கிச்சாவும் அந்த வீட்டில் சகஜமாக புழங்குவத்தால் தான் அனந்து சகாக்கள் கிச்சாவை தேர்வு செய்து அனுப்பி வைத்தனர்.
"அத்திம்பேர்..எப்படி இருக்கேள்!" என்று ராமாயணம் படித்துகொண்டு இருந்த நாராயணஜயரை ஓப்புக்கு கேட்டு விட்டு பதிலுக்கு காத்திராமல் "அக்கா! அக்கா!" என்று அடுப்படிவரை வந்தான் கிச்சா. அலமேலு அம்மாள் அப்பொழுது தான் முருகேசனுக்கு சாதம் போட்டு விட்டு சாத்து கரண்டியோடு வந்து கொண்டு வந்தாள். "கை, கால் அலம்பிண்டு சாப்பிடவரயாடா ?" என்று வழக்கமான புன்முறுவலோடு கேட்டாள்.
கை,கால் அலம்பசென்ற போது அவன் கண்கள் முருகேசன் முட்ட முட்ட சாப்பிடுவதை கவனிக்கதவறவில்லை.வேகத்தோடு ஏதேதோ அலமேலு அம்மாளிடம் கேட்கவந்தவன் பலத்த யோசனையோடு எதுவும் பேசாமல்,சாப்பிட்டு விட்டு திரும்பிப் போனான்.

அதற்கு அடுத்த நாள் அலமேலு அம்மாளின் இரட்டைவட சங்கிலியை காணவில்லை."வாய்க்கால்ல முகம் அலம்புபோது மறந்து இருப்பேனோ?" என்று தனக்கு தானே பேசிக்கொண்டு இத்துடன் நாலு முறை வாய்க்கால் வரை சென்று பார்த்துவிட்டாள் அலமேலு அம்மாள்.எப்போதும் போது இல்லாமல் அலமேலு அம்மாளின் முகம் வாடிப்போனது. நாராயணஜயரிடம் கூறியபோது "இங்க தான் எங்கயாவது வச்சு இருப்ப நல்லா தேடி பாரு?" என்று கூறி மறுபடியும் ராமாயணத்தில் மூழ்கிபோனார்.

இந்த விஷயம் எப்படியோ அஹ்ரகாரம் முழுவதும் பரவியது. "மாமி.உங்க அம்மா உங்க கல்யாணத்துக்கு கொடுத்ததா சொல்லுவேளே அதுவா. அச்சச்சோ. அது பத்து பவனுக்கும் மேலன்னு சொல்லுவேளே..கடைசியா எங்க வைச்சேள்!" என்று சாவித்திரி மாமி துக்கம் விசாரிச்சு விட்டு போனாள்.
தொலைந்து போன ராத்திரி கோவில் திண்ணையில் வெட்டிகதை பேசும் கும்பலில் வந்து அமர்ந்தான் கிச்சா. அன்றைக்க்கு நடந்த விஷயங்களை ஒரு அலசு அலசும் அந்த கூட்டத்தில் இரட்டைவட சங்கிலி காணாமல் போன விஷயமும் விவாதிக்கப்பட்டது."முருகேசனை ஆத்துக்குள்ள அதுவும் பாவுள் வரைக்கும் வர உரிமை கொடுத்தா எங்கக்கா. அதான் சங்கிலியை தூக்கிட்டு போய்ட்டான்.திருட்டு பய!" என்று சமயம் பார்த்து பற்ற வைச்சான் கிச்சா. பெருமாள் கோவில் திண்ணையில் பேசும் விஷயங்கள் காட்டுத்தீயை விட வேகமாக பரவும் என்பதை நன்கு அறிந்தவன் கிச்சா!

சாவித்திரி மாமி அடுத்த நாள் மறுபடியும் வந்து "ஏன் மாமி, முருகேசன் தான் எடுத்துண்டு ஓடிட்டானாமே.வேலைக்கு கூட இன்னிக்கு வரலைபோல?" என்று மேலும் கிளறிவிட்டு போனாள்.

சொன்ன மாதிரியே முருகேசனும் சங்கிலி தொலைந்த அடுத்த நாளில் இருந்து வேலைக்குவரவில்லை. சொல்லி அனுப்பிய ஆளும் திரும்பி வர வில்லை. ஒரு வாரம் கழித்து விசாரித்ததில் தாமிரபரணிபாலத்தில் நடந்த ஜாதிகலவரத்தில் முருகேசனுக்கு அடிபட்டு "ஹைகிரவுண்டு" ஆஸ்பத்திரியில் சேர்த்து இருப்பதாக விஷயம் வந்தது. "கால எடுக்கலன்னா உசுருக்கே கஷ்டம்ன்னு டாக்டருங்க சொல்ல்ட்டாங்க போல!" என்று பூக்காரி செல்வி அலமேலு அம்மாளிடம் சொல்லிவிட்டு போனாள்.

உண்ட வீட்டுக்கு துரோகம் பண்ணா இப்படிதான் ஆகும் என்று அஹ்ரகாரமே முருகேசனை கரிச்சுக் கொட்டியது.ஆனால் அலமேலு அம்மாளோ பலத்த யோசனைக்குப் பிறகு அந்த முடிவிற்கு வந்தாள்
அன்று மதியம் திண்ணையில் விசிறி வீசிக்கொண்டு இருந்த நாராயணஜ்யரை பார்த்து "ஏண்ணா! ஒரு சின்ன யோசனை. கரிசல்குளத்துல இருக்கற அந்த ஒரு ஏக்கர் நிலத்த முருகேசன் பேருக்கு எழுதி வைச்சுருங்கோ! அண்ணா" என்று சொன்ன போது அலமேலு அம்மாள் கண்கள் குளமாகி இருந்தது.அலமேலு அம்மாள் எது சொன்னாலும் அதில் அர்த்த்ம் இருக்கும் என்று நம்பும் நாராயணஜயர் இந்த விஷயத்தில் சில நொடி யோசித்த பின்னர், "சரி. வர வெள்ளிக்கிழமை நல்ல நாள். அன்னிக்கே வக்கில் ஹரிஹரனை வரச்சொல்லி எழுதிரலாம்".என்றார்.இந்த பதிலை கேட்டு அலமேலுஅம்மாள் ஏதோ மனது லேசான சந்தோஷத்தோடு திரும்பி போனாள். நாராயணஜயருக்கு ஏதோ அரைகுறையாக புரிந்தது போல் இருந்தது.
மொத்தமாக இத்தோடு 10 நாள் ஓடிப்போகி இருந்தது.இந்த பத்து நாளும் கண்ணில் தட்டுப்படாத கிச்சா அன்று அலமேலு அம்மாள் வீட்டில் நுழைந்தான்.வாசலில் கண் அசந்து இருந்த நாராயணஜயரிடம் "என்ன அத்திம்பேர்!இளச்சு போன மாதிரி இருக்கேளே!பிரஷர் மாத்திரை எல்லாம் சாப்பிட்டேளா?" என்று அளவுக்கு அதிகமாக அக்கறையோடு விசாரித்தான்."என்னடா!பாத்து ரொம்ப நாளாச்சு? என்றார் பதில் கேள்வியோடு. "மெட்ராஸ்ல இரண்டு கல்யாண வேலை அத்திம்பேர்!" என்று அவசரமாக கூறிவிட்டு அடுத்த கேள்விக்கு காத்திராமல் வீட்டிற்குள் வேகமாக நுழைந்தான்."மார்கழி மாசத்துல யாரு கல்யாணம் பண்ணுவா?" என்று தனக்கு தானே கேட்டுக்கொண்ட நாராயணஜயருக்கு ஏதோ விளங்கியது போல் இருந்தது.
"அக்கா! என்ன இன்னிக்கு பொரிச்சகொழம்பா! வாசல் வரை வாசனை ஆளை தூக்கறது?" என்று ஊஞ்சலில் உட்கார்ந்தான் கிச்சா.திருநெல்வேலியில் இருந்து வந்து இருந்த பேரனுக்கு "தீராத விளையாட்டு பிள்ளை" பாட்டு சொல்லிக்கொடுத்து கொண்டு இருந்த அலமேலு அம்மாள் இவன் வருகையால் கொஞ்சம் நிலை தடுமாறினாள்."என்ன கிச்சா சாப்பிடவரியா?" என்று இவனை பார்க்காமலேயே கூறி விட்டு சாப்பாடு தட்டை எடுக்க அடுப்படிக்கு நுழைந்தாள்.
"அக்கா! என்ன உடம்பு சரியில்லையா அக்கா? ஒரு மாதிரியா இருக்கயே?" என்று கிச்சா கேட்ட தோரணையில் உண்மை இருந்தது போல் இருந்த்து."எனக்கென்ன..நன்னா தான் இருக்கேன்.நீ வா உட்காரு!" என்றாள் சாதத்தை எடுத்த படியே.அலமேலு அம்மாள் நாலு ஆப்பை சாதம் போட்டு, பருப்பு விட்டு, சுத்தமான நெய் இரண்டு கரண்டி விட்டு பொரிச்சகொழம்பை பரிமாறினாள்.அவனது உள்மனது குத்த ஆரம்பித்து கொண்டு இருந்தது.சிறுது நேரம் ஆகியும் ஒரு வாய் கூட சாப்பிடாமல் சாதத்தை பிசைந்து கொண்டே இருந்தான் கிச்சா."இன்னும் கொஞ்சம் பொரிச்சகொழம்பு விடவா? நன்னா சாப்பிடு.என்ன யோசனை?" என்று அலமேலுஅம்மாள் பாசமாக கூறிய அந்த நிமிடம் குற்ற உணர்ச்சி தாங்க முடியாமல் "அக்கா என்னை மன்னிச்சுரு!" என்று சாப்பாடு கையோடு அலமேலு அம்மாளின் காலில் விழுந்தான் கிச்சா!. அவனுடைய கண்களில் இருந்து பொங்கிய கண்ணீர் அலமேலு அம்மாளுக்கு பாத பூஜை செய்தது.