என் மனசாட்சியிடம் திருடியது

என் பெயர். "பிரகாஷ்". படித்தது "திருநெல்வேலி" யில்..வேலை "சிங்கார சென்னை" யில்.... தற்சமயம் "Tokyo" வில். "என்னை சுற்றி .. நம்மை சுற்றி.. நடந்தவை, நடப்பவை பற்றிய அலசல் .. இந்த வலைப்பதிவு...

Monday, January 21, 2013

2012 - தமிழ் சினிமா

2012 ல் தமிழ் சினிமாவில் 150 படங்களுக்கு மேலாக வெளியிடப்பட்டு உள்ள. அதில் இருந்து குறிப்பிடத்தக்க சில படங்களை முன்னிறுத்துவது இந்த கட்டுரையின் நோக்கம்.
எல்லா வகை (genre) சினிமாவையும் ஒரே தராசில் வைத்து மதிப்பிடுவது சரியாகாது என்பதால் படங்களை அதன் Genre முலமாக அலசிப்பார்க்கலாம்.
வரலாற்று பின்னணியில் வந்த படங்களில் அடையாளப்படுத்த வேண்டிய படங்கள் இரண்டு. 1.பாலை. 2.அரவான்.  இரண்டு படங்களிலும் தமிழர்களின் ஒரு காலத்து வாழ்வியல் முறையை அருமையாக பதிவு செய்து இருப்பது இந்தப்படங்களின் சிறப்பு. இருந்தும் அரவான் ( வசந்த பாலன்) க்கு கிடைத்த அங்கீகாரம் பாலை படத்திற்கு கிடைக்கவில்லை. அங்கீகாரத்தை விடுங்கள், பாலை படத்தை வெளியிட சரியான தியேட்டர் கூட கிடைக்கவில்லை என்பதே நிதர்சனம். அத்திபூத்தால் போல் அரிதாக எடுக்கும் முயற்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும், இல்லையென்றால் அரிதான முயற்சிகள் எடுக்கப்படாமலேயே போய்விடலாம்.
2012 ஆம் வருடத்தில் நிறைய வெற்றியை வாரிக்கொடுத்தது காமெடிப்படங்கள். அந்த வகை படங்களில்  நம்மை சிரிப்பால் கட்டிபோட்ட சில படங்கள் 1. கலகலப்பு 2. ஒரு கல் ரு கண்ணாடி 3. அட்டகத்தி, 4.நடுவில கொஞ்சம் பக்கத காணோம் மற்றும் 5. காதலில் சொதப்புவது எப்படி.
சுந்தர்.C யின் கலகலப்பு அரத பழசு கதையைக்  கொண்டு இருந்தாலும் படம் தொய்வு இல்லாமல் இருப்பது பலம். ஒரு கல் ஒரு கண்ணாடி - உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக அறிமுகம் செய்யப்பட்ட படம். இயக்குனர் ராஜேஷ் ஏற்கனவே கொடுத்த  சிவா மனசுல சக்தி,பாஸ் என்கிற பாஸ்கரன்  போன்ற அதே template என்றாலும் ராஜேஷ் கதையை , ஹீரோவை விட காமெடியன் சந்தானத்தை நம்பி படத்தைக் கொடுத்து வெற்றி பெற்று இருக்கிறார். அடுத்த முறையும் இதே Template இல் ராஜேஷ் படம் எடுக்காமல் இருப்பது அவருக்கு நல்லது. அடுத்தது அட்டகத்தி. இதுவரை கிராமிய காதல், நகர்ப்புற காதலை படம் பிடித்த இயக்குனர்கள் இந்த படத்தில் புறநகர் காதலை படம் பிடித்தது ஒரு புதுமை. எந்த ஒரு அறிமுகமும் இல்லாத நடிகர்கள், சொல்லிகொள்ளும் படி அழுத்தம் இல்லாத கதை இப்படி இருந்த போதிலும் பெரிய வெற்றியை தேடிக்கொண்ட படம். இயக்குனர் ரஞ்சித் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.



நடுவில கொஞ்சம் பக்கத்த காணும் !. படத்துல பாட்டு காணோம், ஹீரோயின் ஹீரோ ரொமாண்டிக் காணோம், Foreign Location காணோம், பெரிய கதைன்னு பெரிசா எதுவும் காணோம். மேலாக  "என்னாச்சு?..."  என்கிற வசனத்தை படம் முழுவதும் பேசிக்கொண்டீருந்தாலும் படத்தை அலுக்காமல் கொண்டு சென்ற பாலாஜி தரணிதரன் கண்டிப்பாக பாராட்டப்பட வேண்டியவரே!.
காதலில் சொதப்புவது எப்படி :சன் டிவி யின் நாளைய இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கிய படம். நடிகர் சித்தார்த்தே தயாரித்து நடித்த படம். ஒரு குறும்படத்தை வெள்ளித்திரையில் முழு படமாக காட்டுவதற்கு ஒரு திறமை வேண்டும். அந்த அடிப்படையில் கண்டிப்பாக பாலாஜி தரணிதரன் வரிசையில் இந்த பாலாஜியையும் சேர்த்து விடலாம். இவர்களுக்கு முதல் படி அமைத்து கொடுத்த "நாளைய இயக்குனர்" நிகழ்ச்சி கண்டிப்பாக ஒரு பெரிய படிப்பின்மையும் நல்ல மேடையும் பேரையும் வாங்கிக் கொடுத்துள்ளது என்பது குன்றின் மேலிட்ட விளக்கு! 
(serious)அழுத்தமான கதைக்களங்களை கொண்ட படங்களில் குறிப்பிட்டு சொல்லகூடியவை. 1. வழக்கு  எண் 18/9. 2. நீர்ப்பறவை. 3. சாட்டை மற்றும் 4. கும்கி.
வழக்கு  எண் 18/9: பாலாஜி சக்திவேல் காதல் , கல்லூரியை தொடர்ந்து விளிம்பு நிலை மனிதர்களின் ஆசாபாசங்களை , உணர்ச்சிகளை கண் முன்னே நிறுத்திய படம். கதை சொல்லல் முறையில் இருந்து படத்தை கையாண்ட விதத்தில் ரசிகர்களின் உள்ளங்களில்  பாத்திரங்கள் ஆழமாக பதிந்து விடுகின்றனர். ஒரு யதார்த்த வாழ்கையை நேர்மையாக படம் பிடித்த பாலாஜி சக்திவேலுக்கு HatsOff
தென்மேற்கு பருவக்காற்று புகழ் சீனு ராமசாமியின் நீர்ப்பறவை அழுத்தமான சினிமாவின் தரவரிசையில் நிச்சியம் ஒரு மைல்கல். யாரும் எளிதில் தொட முடியாத ஒரு sensitive oneliner யை சுற்றி கதை அமைத்து அதை திறம் பட படம் பிடித்து "நச்" என்று சொல்லிய விதத்தில் இயக்குனர் தமிழ் சினிமாவின் வரலாற்றில் நீங்க முடியாத இடத்தை பிடித்து உள்ளார்.
பிரபு சாலமனின் கும்கி : யானை மாறாட்டம். கும்கி என்கிற யானைக்கு பதில் கோயில் யானை போனால் என்ன ஆகும் என்பதே ஒரு வரிக்கதை. யானைக்கதையோடு  காதல் கதையும் ஒன்று சேர்ந்து காட்டில் பயணிக்கின்றன . எடுத்துக்கொண்ட கதைக்களம், படம் பிடித்த கோணங்கள் ஆகியவை பதிய வைக்கிறது.
 மேலே குறிப்பிட்ட படங்களின்  இயக்குனர்கள் நமக்கு ஏற்கனவே பரிச்சயம் ஆனவர்கள் தான்,
ஆனால்  "சாட்டை" ஒரு அறிமுக இயக்குனர் அன்பழகன் இயக்கிய படம். ஆசிரியர்களுக்கு சாட்டை முலம் "பளிச் " "பளிச்" என்று அறிவுரைகள் கொடுத்து நல்ல பேரை வாங்கி கொள்கின்றார் இயக்குனர். தயாளன் என்ற பாத்திரத்தில் சமுத்திரகனி தன்பாத்திரத்தை மனதில் பதிய வைக்கிறார்.
பொழுதுபோக்கு வகை படங்களில் 2012இல் குறிப்பிட வேண்டிய சில படங்கள்  சுந்தரபாண்டியன் மற்றும் துப்பாக்கி.
சசிகுமார் ஒரு சாக்லேட் ஹீரோவாகவோ அல்லது "பக்கத்துக்கு வீட்டு பையன்" சாயலோ இல்லாமலேயே எப்படியோ மக்களை தன்பக்கம் ஈர்த்து வைத்து இருக்கிறார். குறிப்பாக அவருக்கு தென்தமிழ்நாட்டு ரசிகர்கள் அதிகம். படம் சுப்பிரமணியபுரம் சாயலில் இருந்தாலும் ஒரளவு வெற்றியை தக்கவைத்து கொள்கிறது.
2012 ஆம் வருடம் விஜய்க்கு சுக்கிரதிசை போலும்!. தொடர்ச்சியாக தோல்வியை தழுவிக் கொண்டு இருந்த நேரத்தில் ஆரம்பத்தில் வெளிவந்த ரீமேக்-நண்பனும், கடைசியில் வெளிவந்த துப்பாக்கியும் சிறந்த வெற்றியை கொடுத்தது. விஜயகாந்த், அர்ஜுன் நடிக்கவேண்டிய பாத்திரத்தில் விஜய். தீவிரவாதிகளை  தனியே அழித்து நொறுக்குகிறார். Entertaintmentக்கு தேவையான அனைத்து அம்சமும் கலந்து மறுபடி விஜய் வெற்றி வாகை சூடிஇருக்கிறார் துப்பாக்கி மூலமாக!
இது வரை குறிப்பிட்ட படங்களை தவிர மேலும் இரண்டு படங்களைப் பற்றி குறிப்பிடாமல் 2012ஆம் வருடம் முழுமை அடையாது. 1.அம்புலி தமிழ் சினிமாவின் முதல் 3D படம் என்ற பெருமையோடு தமிழ் சினிமா வரலாற்றில்  ஒரு இடத்தை பிடித்துக்கொள்கிறது. அடுத்தது "நான் ஈ "..ஒரே ஒரு "ஈ" யை வைத்து ராஜமௌலி என்ற இயக்குனர் ரசிகர்களை கட்டிபோடுகிறார். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும்  படியான நல்ல படத்தை கொடுத்த இயக்குனருக்கு மனமார்ந்த நன்றிகள்.
இந்த வருடம் பெரிதாக எதிர்பார்க்கப்பட்டு தோல்வியை தழுவிய படங்கள் பல. முகமூடி, மாற்றான், தாண்டவம், பில்லா-2, என்று இந்த வரிசை நீண்டு கொண்டு போகிறது.
ஆக, 2012 இல் வெற்றி பெற்ற பெரும்பான்மையான படங்கள் சிறிய பட்ஜெட் படங்களே எனலாம். இந்த படங்களுக்கு பெரிதாக "Starvalue"யும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 2013ல் தமிழ் சினிமா மேலும் பல வெற்றி படங்களை கொடுப்பதற்கு வாழ்த்துக்கள்!


  
2012ல் தமிழ் திரை இசையில் குறிப்பிடும் படியாக சில நிகழ்வுகளும் அரங்கேறின. 3 படத்தின் தமிழ்(தங்கிலீஷ்?) வரிகளை கொண்ட "why this Kolaveri " பல பரிமாணங்களில் பலராலும்  சிலாகிக்கப்பட்டது .
இளையராஜாவின் ரசிகர்களுக்கு "நீ தானே என் பொன்வசந்தம்" இசை வெளியீட்டு விழா ஒரு பெரிய கொண்டாட்ட திருவிழா!!. ராஜாவின் இசை விரும்பும் ரசிகர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய நிகழ்ச்சி!.
டோக்கியோவில் முதல் முதலாக துப்பாக்கியை தியேட்டரில் வெளியிட்டது ஒரு புதிய முயற்சி. வரவேற்க்கத்தக்கது!. இந்த வருடம் மேலும் பல புதிய படங்கள் வெளி வரலாம். பால் அபிஷேகம், கட்-அவுட், விசில் சத்தத்தையும் இந்த டோக்யோ எதிர்பார்க்கலாம்.! வாழ்த்துக்கள்!

Wednesday, September 14, 2011

இன்றும் தொடர்கிறதா ?

இன்றும் தொடர்கிறதா ?

* வருடா வருடம் நடக்கும் செல்வி அம்மன் கோவில் கொடை இன்னும் நடக்கிறதா ? முக்கியமா கரகாட்டம் ஆடப்படுகிறதா?
* இன்றும் காலனி கிரிக்கெட் கிரௌண்டில் இளசுகளின் சாயங்கால அரட்டை தொடர்கிறதா ?
* பஸ்ஸில் பின்னாடி இடம் இருந்தும் காலேஜ் பசங்க இன்னும் " முன்னாடி " தான் தொங்கி செல்கிறார்களா ?
* "ரயில்வே கேட் " இன் அடிப்பக்கம் வழியாக சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் ஐ சரித்து கடந்து செல்லும் இன்னும் மக்கள் உள்ளார்களா ?
* இன்றும் நண்பர்களை "மக்கா " என்று கூப்பிடும் பழக்கம் உள்ளதா ?
* 9B பஸ் stop இன்றும் அதே பேரில் தான் அழைக்கபடுகிறதா ?
* "தாழையுத்தா ? கிளம்பும் போது ஏறிக்க " என்று ஜங்ஷன் பஸ் ஸ்டாண்ட்இல் சொல்லும் மதுரை பஸ் கண்டக்டர்கள் என்றும் உள்ளனரா ?
* ஒரு செமஸ்டர்ல இருக்கற 5 பாடங்களையும் ஒரே நோட்டில் 5 dimensional ஆக எழுதும் என்னை போன்ற அறிவுஜீவிகள் இன்னும் இருக்கிறார்களா ?
* பஸ்சில் ஓடி வந்து ஏறி தொங்கிக்கொண்டு டிபன் பாக்ஸ்சையும் நோட்டையும் "ஜன்னல் பிகர் " இடம் கொடுத்து வைக்கும் காட்சிகள் இன்னும் அரங்கேறுகிறதா ?
* நெல்லை கிரிக்கெட் league தொடர்ந்து நடக்கிறதா ? யாரு கடந்த வருட வின்னர்ஸ் ?
* கிரிக்கெட் League இல் அம்பயரிங் சம்பளம் கூட்டபட்டு உள்ளதா? இல்லை அதே சம்பளம் தானா ?
* "25 ரன் அல்லது 3 விக்கெட்" என்ற பேப்பர் ஸ்கோர்களின் விதி மாறி இருக்கிறதா ?
* இன்றும் பழக்கடைகளில் பன்னீர் சோடா விற்கப்படுகிறதா ?
* பிளாட்பாரம் இட்லி கடை, பரோட்டா கடை போன்றவைகளுக்கு இன்றும் கிராக்கி உள்ளதா ?
* பள்ளிகூட மாணவிகள் இடது புறமாகவும் மாணவர்கள் வலது புறமாகவும் நடந்து சங்கர் ஸ்கூல்க்கு செல்வது நடைமுறையில் உள்ளதா ?

Friday, September 09, 2011

மீண்டும் எழுத ஆசை..

மீண்டும் எழுத ஆசை..
இது ஒரு சிறிய தொடக்கம் ..
சோம்பலில் இருந்து மீண்டு வர வேண்டுகிறேன்...
***

Saturday, January 03, 2009

இரட்டைவட சங்கிலி

ரோஜாவில் வரும் சுந்தரபாண்டியபரத்தை போல இதுவும் அழகான கிராமம் இது. நீட்டமான அஹ்ரகாரம் , தெருவின் இரண்டு பக்கத்திலும் வரிசையாய் வீடுகள், வீடுகளுக்கு பின்னால் ஓடும் வாய்க்கால், சிலுசிலு குற்றாலக்காற்று, எங்கேயும் பச்சபசேல் என ரம்யமான சூழல் அது.

அலமேலு அம்மாள் 71வயது ஆனாலும் 17வயது சுறுசுறுப்பு. அகத்தின் அழகு முகத்தில் தெரியும், இது அலமேலுஅம்மாளுக்கு அப்படியே பொறுந்த்தும். கருணையே வடிவான கண்கள், துறுதுறுபேச்சு, ஊருக்கே அலமேலு அம்மாளின் நல்ல குணம் பரிச்சயமானது. பள்ளிக்கூட வயசுல வீட்டுல யாரும் இல்லைஎன்றாலும் அலமேலு அம்மாள் காலை 4 மணில இருந்து மதியம் 2 மணிக்கு அப்பளம் எண்ணிவைக்கற வரை அலமேலு அம்மாள் வாசப்படியில் இருந்து வைக்கற்கட்டு வரை குறுக்காலும் நெடுக்காலும் 10 முறை நடந்து விடுவாள்.

காலைல 4 மணிக்கு மாடு சத்தம் கேட்டால் கொல்லப்புறத்துல முருகேசன் வேலைக்கு வந்துட்டான் என்று அர்த்தம். முருகேசன் மாட்ட குளுப்பாட்டறதுல இருந்து, பால் கறந்து, சாணி அள்ளி, புண்ணாக்குவைச்சு, வைக்கல் காட்டி எல்லாவேலையும் செய்வான்.முருகேசன் அப்பா மாயாண்டி காலத்துல இருந்தே நாராயணஜயர்(அலமேலு அம்மாளின் மறுபாதி)வீட்டில் தான் வேலைபார்த்து வருகின்றனர்.அலமேலு அம்மாள் தன் ஜந்து மகன்களையும் சேர்த்து முருகேசனையும் ஒரு மகனாகவே எண்ணி பாவித்து இருந்தாள்.முருகேசனும் வீட்டிற்குள் சகஜமாக வருவதும் போவதுமாக இருந்தான்.

இப்படி முருகேசன் நாராயணஜயர் வீட்டிற்கு வந்து போவது அஹ்ரகாரத்து பெருசுகளுக்கு வெகுநாளாக நெருடலாக இருந்தாலும் நாராயணஜயரை எதிர்த்து பேச யாருக்கும் தைரியம் இல்லை.ஒரு நாள் கிச்சாவை ஏத்தி விட்டது அனந்துவும் அவர் சகாக்களும்.கிச்சா-45வயதான ஒரு ஒண்டிக்கட்டை. ஒரு வகையில் அலமேலு அம்மாளுக்கு ஒண்ணு விட்ட தம்பி முறை கூட.சமையல் வேலையில் 15 நாளைதவிர அலமேலு அம்மாளின் கையில் தான் சாப்பாடு. கிச்சாவும் அந்த வீட்டில் சகஜமாக புழங்குவத்தால் தான் அனந்து சகாக்கள் கிச்சாவை தேர்வு செய்து அனுப்பி வைத்தனர்.
"அத்திம்பேர்..எப்படி இருக்கேள்!" என்று ராமாயணம் படித்துகொண்டு இருந்த நாராயணஜயரை ஓப்புக்கு கேட்டு விட்டு பதிலுக்கு காத்திராமல் "அக்கா! அக்கா!" என்று அடுப்படிவரை வந்தான் கிச்சா. அலமேலு அம்மாள் அப்பொழுது தான் முருகேசனுக்கு சாதம் போட்டு விட்டு சாத்து கரண்டியோடு வந்து கொண்டு வந்தாள். "கை, கால் அலம்பிண்டு சாப்பிடவரயாடா ?" என்று வழக்கமான புன்முறுவலோடு கேட்டாள்.
கை,கால் அலம்பசென்ற போது அவன் கண்கள் முருகேசன் முட்ட முட்ட சாப்பிடுவதை கவனிக்கதவறவில்லை.வேகத்தோடு ஏதேதோ அலமேலு அம்மாளிடம் கேட்கவந்தவன் பலத்த யோசனையோடு எதுவும் பேசாமல்,சாப்பிட்டு விட்டு திரும்பிப் போனான்.

அதற்கு அடுத்த நாள் அலமேலு அம்மாளின் இரட்டைவட சங்கிலியை காணவில்லை."வாய்க்கால்ல முகம் அலம்புபோது மறந்து இருப்பேனோ?" என்று தனக்கு தானே பேசிக்கொண்டு இத்துடன் நாலு முறை வாய்க்கால் வரை சென்று பார்த்துவிட்டாள் அலமேலு அம்மாள்.எப்போதும் போது இல்லாமல் அலமேலு அம்மாளின் முகம் வாடிப்போனது. நாராயணஜயரிடம் கூறியபோது "இங்க தான் எங்கயாவது வச்சு இருப்ப நல்லா தேடி பாரு?" என்று கூறி மறுபடியும் ராமாயணத்தில் மூழ்கிபோனார்.

இந்த விஷயம் எப்படியோ அஹ்ரகாரம் முழுவதும் பரவியது. "மாமி.உங்க அம்மா உங்க கல்யாணத்துக்கு கொடுத்ததா சொல்லுவேளே அதுவா. அச்சச்சோ. அது பத்து பவனுக்கும் மேலன்னு சொல்லுவேளே..கடைசியா எங்க வைச்சேள்!" என்று சாவித்திரி மாமி துக்கம் விசாரிச்சு விட்டு போனாள்.
தொலைந்து போன ராத்திரி கோவில் திண்ணையில் வெட்டிகதை பேசும் கும்பலில் வந்து அமர்ந்தான் கிச்சா. அன்றைக்க்கு நடந்த விஷயங்களை ஒரு அலசு அலசும் அந்த கூட்டத்தில் இரட்டைவட சங்கிலி காணாமல் போன விஷயமும் விவாதிக்கப்பட்டது."முருகேசனை ஆத்துக்குள்ள அதுவும் பாவுள் வரைக்கும் வர உரிமை கொடுத்தா எங்கக்கா. அதான் சங்கிலியை தூக்கிட்டு போய்ட்டான்.திருட்டு பய!" என்று சமயம் பார்த்து பற்ற வைச்சான் கிச்சா. பெருமாள் கோவில் திண்ணையில் பேசும் விஷயங்கள் காட்டுத்தீயை விட வேகமாக பரவும் என்பதை நன்கு அறிந்தவன் கிச்சா!

சாவித்திரி மாமி அடுத்த நாள் மறுபடியும் வந்து "ஏன் மாமி, முருகேசன் தான் எடுத்துண்டு ஓடிட்டானாமே.வேலைக்கு கூட இன்னிக்கு வரலைபோல?" என்று மேலும் கிளறிவிட்டு போனாள்.

சொன்ன மாதிரியே முருகேசனும் சங்கிலி தொலைந்த அடுத்த நாளில் இருந்து வேலைக்குவரவில்லை. சொல்லி அனுப்பிய ஆளும் திரும்பி வர வில்லை. ஒரு வாரம் கழித்து விசாரித்ததில் தாமிரபரணிபாலத்தில் நடந்த ஜாதிகலவரத்தில் முருகேசனுக்கு அடிபட்டு "ஹைகிரவுண்டு" ஆஸ்பத்திரியில் சேர்த்து இருப்பதாக விஷயம் வந்தது. "கால எடுக்கலன்னா உசுருக்கே கஷ்டம்ன்னு டாக்டருங்க சொல்ல்ட்டாங்க போல!" என்று பூக்காரி செல்வி அலமேலு அம்மாளிடம் சொல்லிவிட்டு போனாள்.

உண்ட வீட்டுக்கு துரோகம் பண்ணா இப்படிதான் ஆகும் என்று அஹ்ரகாரமே முருகேசனை கரிச்சுக் கொட்டியது.ஆனால் அலமேலு அம்மாளோ பலத்த யோசனைக்குப் பிறகு அந்த முடிவிற்கு வந்தாள்
அன்று மதியம் திண்ணையில் விசிறி வீசிக்கொண்டு இருந்த நாராயணஜ்யரை பார்த்து "ஏண்ணா! ஒரு சின்ன யோசனை. கரிசல்குளத்துல இருக்கற அந்த ஒரு ஏக்கர் நிலத்த முருகேசன் பேருக்கு எழுதி வைச்சுருங்கோ! அண்ணா" என்று சொன்ன போது அலமேலு அம்மாள் கண்கள் குளமாகி இருந்தது.அலமேலு அம்மாள் எது சொன்னாலும் அதில் அர்த்த்ம் இருக்கும் என்று நம்பும் நாராயணஜயர் இந்த விஷயத்தில் சில நொடி யோசித்த பின்னர், "சரி. வர வெள்ளிக்கிழமை நல்ல நாள். அன்னிக்கே வக்கில் ஹரிஹரனை வரச்சொல்லி எழுதிரலாம்".என்றார்.இந்த பதிலை கேட்டு அலமேலுஅம்மாள் ஏதோ மனது லேசான சந்தோஷத்தோடு திரும்பி போனாள். நாராயணஜயருக்கு ஏதோ அரைகுறையாக புரிந்தது போல் இருந்தது.
மொத்தமாக இத்தோடு 10 நாள் ஓடிப்போகி இருந்தது.இந்த பத்து நாளும் கண்ணில் தட்டுப்படாத கிச்சா அன்று அலமேலு அம்மாள் வீட்டில் நுழைந்தான்.வாசலில் கண் அசந்து இருந்த நாராயணஜயரிடம் "என்ன அத்திம்பேர்!இளச்சு போன மாதிரி இருக்கேளே!பிரஷர் மாத்திரை எல்லாம் சாப்பிட்டேளா?" என்று அளவுக்கு அதிகமாக அக்கறையோடு விசாரித்தான்."என்னடா!பாத்து ரொம்ப நாளாச்சு? என்றார் பதில் கேள்வியோடு. "மெட்ராஸ்ல இரண்டு கல்யாண வேலை அத்திம்பேர்!" என்று அவசரமாக கூறிவிட்டு அடுத்த கேள்விக்கு காத்திராமல் வீட்டிற்குள் வேகமாக நுழைந்தான்."மார்கழி மாசத்துல யாரு கல்யாணம் பண்ணுவா?" என்று தனக்கு தானே கேட்டுக்கொண்ட நாராயணஜயருக்கு ஏதோ விளங்கியது போல் இருந்தது.
"அக்கா! என்ன இன்னிக்கு பொரிச்சகொழம்பா! வாசல் வரை வாசனை ஆளை தூக்கறது?" என்று ஊஞ்சலில் உட்கார்ந்தான் கிச்சா.திருநெல்வேலியில் இருந்து வந்து இருந்த பேரனுக்கு "தீராத விளையாட்டு பிள்ளை" பாட்டு சொல்லிக்கொடுத்து கொண்டு இருந்த அலமேலு அம்மாள் இவன் வருகையால் கொஞ்சம் நிலை தடுமாறினாள்."என்ன கிச்சா சாப்பிடவரியா?" என்று இவனை பார்க்காமலேயே கூறி விட்டு சாப்பாடு தட்டை எடுக்க அடுப்படிக்கு நுழைந்தாள்.
"அக்கா! என்ன உடம்பு சரியில்லையா அக்கா? ஒரு மாதிரியா இருக்கயே?" என்று கிச்சா கேட்ட தோரணையில் உண்மை இருந்தது போல் இருந்த்து."எனக்கென்ன..நன்னா தான் இருக்கேன்.நீ வா உட்காரு!" என்றாள் சாதத்தை எடுத்த படியே.அலமேலு அம்மாள் நாலு ஆப்பை சாதம் போட்டு, பருப்பு விட்டு, சுத்தமான நெய் இரண்டு கரண்டி விட்டு பொரிச்சகொழம்பை பரிமாறினாள்.அவனது உள்மனது குத்த ஆரம்பித்து கொண்டு இருந்தது.சிறுது நேரம் ஆகியும் ஒரு வாய் கூட சாப்பிடாமல் சாதத்தை பிசைந்து கொண்டே இருந்தான் கிச்சா."இன்னும் கொஞ்சம் பொரிச்சகொழம்பு விடவா? நன்னா சாப்பிடு.என்ன யோசனை?" என்று அலமேலுஅம்மாள் பாசமாக கூறிய அந்த நிமிடம் குற்ற உணர்ச்சி தாங்க முடியாமல் "அக்கா என்னை மன்னிச்சுரு!" என்று சாப்பாடு கையோடு அலமேலு அம்மாளின் காலில் விழுந்தான் கிச்சா!. அவனுடைய கண்களில் இருந்து பொங்கிய கண்ணீர் அலமேலு அம்மாளுக்கு பாத பூஜை செய்தது.

Saturday, April 07, 2007

விஜய T.ராஜேந்தர் - in SunTV..

விஜய T.ராஜேந்தர் "SUNTV -அசத்தப் போவது யாரு?" .. நிகழ்ச்சியோட chief guest ஆ வந்தார். வந்தவங்களை பேச விடாம இந்த ஆளு பேசிக்கிட்டே போறாரு. சிட்டிபாபு "அம்மாவை பத்தியும் உங்களுக்கு தெரியும்ன்னு" சீண்ட, TR ரொம்பவே உணர்ச்சிவசப்பட்டாரு...

chief guest ஆ இருந்து வந்த வேலைய மட்டும் பார்த்தோமா..இல்லாயான்னு இல்லாம.. என்ன்மோ. ஓலைப்பாய்ல One bathroom மாதிரி.."திருமுகம்", "ஆறுமுகம்".."பலமுகம்" ன்னு அறுக்க எப்ப நிறுத்துவாருன்னு ஆயிருச்சு..... program நடக்கும் போதே..திடீருன்னு சிம்பு-மன்மதன், அழகு..ஆனா..நான் ஒரு வெண்ணை, அழுக்குமூஞ்சி, அசிங்கம்ன்னு சொல்லி அவர அப்படியே உயர்த்திக்கிட்டாரு..."திறமை தான் அழகு..முகம் இல்லை.ன்னு தத்துவம் வேற..

ஒரு விஷயம் கண்டிப்பா SunTV கிட்ட கேட்டே ஆகணும். "TR அ நிறைய நேரத்தில ஒரு Side Angle ல காட்டறீங்களே? ஏன்?...அப்ப தான் அவரு தொந்தி ஒரு பெரியா பானை மாதிரி தெரியுதே..அதுக்காகவா? Chief Guest ஆ கூட்டிட்டு வந்து கவுத்துங்க!!..என்னமோ அசத்துங்க.."

பேசினா திக்குவாயா வரும்ன்னு பாடிக்காட்டி "தன்னம்பிக்கைக்கு சொந்தக்காரன்"..ன்னு பேரு வாங்கின ஆரோக்கியராஜை..TR "அசத்தல் மன்னனா" தேர்வு செஞ்சாரு...அவர நல்லா ஊக்கம் வர வார்த்தைகளால் பேசினாரு.. கடைசில..உணர்ச்சிவசப்பட்டு... ஒரே அழுவாச்சி..தன்னோட சொந்த வாழ்க்கைய பத்தி பேச ஆரம்பிச்சுட்டாரு... அப்ப மதன்பாப், சிட்டிபாபுவ பார்த்து.."நான், சொன்னேன்..இந்த ஆளு வேண்டாம்ன்னு..இப்ப..பாரு.இது தேவையா?" ன்னு சொல்லற மாதிரி ஒரு Look விட்டாரு"..பாருங்க..அப்படியே அப்பட்டமா தெரிஞ்சுது..இப்படி எல்லாம் Program நடத்தறவங்க பண்ணாம இருந்தா கொஞ்சம்..நல்லா இருக்கும்.

TR கடைசில..Dance அ போட்டு..ஒரு பாட்டயும் பாடி...என்னமோ அசத்திட்டுபோய்ட்டாரு.. TR மாதிரி ஆளூங்க.."அழகு.முஞ்சியில இல்ல. .திறமையில இருக்குன்னு சொல்லிட்டு போறாங்க..நல்லா தான் இருக்கு.. ஆன..இவரு பண்ணற நம்ம பார்க்க நமக்கு தான் நிறைய பொறுமை வேணும்..

Monday, March 12, 2007

கலக்கல் to அசத்தல்

"அசத்த போவது யாரு?" அப்படின்னு ஒரு "Program" SUN TV ல ஆரம்பிக்கராங்க. "Vijay" TV யோட "கலக்க போவது யாரு?" ஓட அப்பட்ட copy னு சொல்லலாம். அதே Team. அதே "Participants", அதே Judges... கொஞ்சம் கூட மாற்றாமா!!!.( Sorry.. SET மாத்தி இருக்க்காங்க. ) ஏன் வேற creative Idea கொஞ்சம் கூட கிடைக்கலயா என்ன ?

Participants எல்லாம் என்னமோ SUN TV தான் எங்களுக்கு வாழ்க்கை கொடுத்த மாதிரி பேசரது Too much ஆ இருக்கு. SUN TV ல என்ன கொடுத்தாங்க, அல்லது Vijay TV ல என்ன கொடுக்கலன்னு தெரியல... ஆனா சொல்லி வெச்ச மாதிரி எல்லா Participants உம்.."Sun TV " தான் எங்களுக்கு எல்லாமே.. அவங்க தான் எங்கள வெளிச்சதுக்கு கொண்டு வந்தாங்ன்னு சொல்லறது ஏதோ சிறுபிள்ளை மனப்பாடம் பண்ணி ஒப்பிக்கற மாதிரி இருக்கு.

Vijay TV வளர்த்துவிட்ட கலைஞர்கள் இப்ப சூரியன் கிட்ட குளிர் காயலாம்னு வந்து இருக்காங்க..?? நமக்கு என்ன விட்டுக்குள்ள கால ஆட்டிக்கிட்டே பார்ப்போம்.....

பருத்தி வீரன்

கிராமத்து மணம் (Nativity) சிறிதும் குறையாமல் எடுத்து இருக்கற Ameer க்கு முதல் பாராட்டு. பாட்டுக்காக Foreign, "ஓரு Item Number Song", கதையை விட்டு நழுவிய "comedy Track" இந்த மாதிரி தமிழ் cinema விற்கே சொந்தமான விஷயங்கள் இல்லாம ஒரு படம் கொடுக்க நிறைய தைரியமும் தன்னம்பிக்கையும் வேணும். "Ameer" கிட்ட அதிகமா இருக்குன்னு இந்த படம் மூலமா நிருபிச்சு இருக்காரு.
கார்தி ..முதல் படமாம், "Debut" இல் "century" அடிச்சுட்டாரு. இவரு "US" ல MS" படிச்சவராம். இந்த படம் பார்த்துட்டு யாரும் நம்ப மாட்டாங்க. "Director" ஓட "pulse" அ புரிஞ்சிக்கிட்டு மனுஷன் அந்த "character" ஆகவே வாழ்ந்து காட்டி இருக்காரு. மதுரை தமிழ் இவருக்கு சொல்லி கொடுத்து வந்த மாதிரியே தெரியல. இயல்பா இருக்கு. "Body Language, Expressions" எல்லாமே சாதாரணமா வருது. சூர்யா உங்களுக்கு போட்டி உங்க வீட்டுல தான் இருக்கு ஜாக்கிரதை.
"ப்ரியாமணி", "பாரதிராஜா" வின் அறிமுகம், "முத்தழகு" ஆக ரொம்ப நல்லா பண்ணி இருக்காங்க.சொந்த குரல்ல பேசி இருக்கறதுனால மதுரை தமிழ் கொஞ்சம் கஷ்ட்டபடுது, இருந்தும் ப்ரியாமணிக்கு இது ஒரு பெரிய திருப்பத்தை தரும் என்பது உண்மை.
"Ramji" cinematography". இல் அசத்தி இருக்காரு. சாதாரணமா நம்ம பாக்கற இடத்தை "cinema" முன்னாடி ரொம்ப அழகா காட்டி இருக்காரு...இவரோட "camera" படதுக்கு பெரிய "plus point". ஒரு "Frame" அ பாதியா cut பண்ணி வேற வேற கோணத்தில் காட்டி இருக்கிறாரு..இந்த மாதிரி நிறைய காட்சிகள் .புதுமையோடு ..படத்திற்க்கு மேலும் அழகு கூட்டி இருக்கிறது.
யுவன். அப்பவோட பேர நல்லாவே காப்பாத்திட்டு வராரு.."அறியாத வயசு" அவங்க அப்பாவே பாடியது படம் பார்த்த அப்பறமும் முணுமுணுக்க வைக்குது. யுவனுக்கு இது ஒரு வித்தியாசாமன கதை தளம்.."Challenging". அத நல்லாவே ப்ண்ணி இருக்காருன்னு தான் சொல்லணும்.
நாட்டுபுறப்பாட்டு, திருவிழா காட்சிகள் ரொம்ப நீழமாக இருப்பதை குறைத்து இருக்கலாம்.."Bad Language", வன்முறை அதிகமா இருந்தாலும் படத்திற்க்கு அவ்வளவும் தேவைபட்டது என்பது Ameerன் வாதம்.
Highlight..படத்தின் Climax இப்ப எல்லாம் வித்தியாசமான Climax ல முடிக்கணும். அப்ப தான் ஒரு "Maturity Image" படத்திற்கு கிடைக்கும் அப்படிங்கற "Trend Setter" அ follow பண்ணி இருக்காரு. பாரதி கண்ணம்மா, சேது, நந்தா, காதல்..இவைகளோட முடிவு எப்படி மறக்கப்படாததோ அதே போன்றது "பருத்தி வீரன்" இன் முடிவும்..இருந்தும் என்னை பொறுத்த வரை கொஞ்சம் "Over Dosed" ஆகவே படுகிறது.
மொத்ததில் தமிழ் சினிமாவை உலகம் மேலும் உயர்த்தி பார்க்க வைக்கும் மற்றொரு படம் இந்த "பருத்தி வீரன்".

Wednesday, December 28, 2005

ஒரு கணம் ஒரு யுகமாக

"உர்..உர்" என்று "Vibrator"ஆல் சிணுங்கியது "Mobile". "Heater" இருந்தும் போர்வையைத்தாண்டி குளிர் என்னை பந்தாடியது. 7:30 மணிஆகியும் காலைநேர இதமான தூக்கத்திற்கு மனம் ஏங்கியது. "என்னாங்க?நேரம் ஆச்சு?" என்று நாலாவது முறையாக மனைவியின் குரலில் வேண்டா வெறுப்பாக எழுந்து கொண்டேன்..

15 நிமிடத்தில் பிச்சைக்கார "Jerkin", துவைக்காத "Blazer" , அரவிந்த்சாமி "sweater" மற்றும் கூர்க்கா குல்லா, பேய் "Glouse" என்று ஒரு Mofia gang Rangeக்கு Dress செய்து.(குளுரும்ல பின்ன)..பையைத் தூக்கி கொண்டு கிளம்பினேன் Office க்கு...மனைவி செய்து கொடுத்த சப்பாத்தியின் பாதி என் வாயிலேயும், மீதி பாதியை "Jerkin" வாயிலும் போட்டு விட்டு சவைத்துக்கொண்டே "Booyyyyeeee" என்றேன்.

என் கார் Seat ( சும்மா Buildup தான்..CYCLE a சொன்னேங்க..) இன் மேல் இருந்த "பனித்துளியை" செல்லமாக தட்டி விட்டு Stand ஐ எடுத்து விட்டு பயணத்தை தொடங்கினேன்.."Jerkin" இல் இருந்த "ipod" ஐ "start" செய்தவுடன் ."நான் கட்டில் மீது கண்டேன் வெண்ணிலாஆ." என்றது....

5 நிமிட cycle பயணம், பின்னர் 3 நிமிட "நடராஜ service"..மணியை பார்த்துக்கொண்டேன்..சரியாக 7:52. எப்படியும் 7:59 ஐ பிடித்து விட
வேண்டும் என்று தீர்மானித்துக்கொண்டு விரட்டினேன் Cycleஐ. ஆச்சரியம் Road இன்று காலியாக இருந்தது.."தனிக்காட்டுராஜா" (புள்ளீ ராஜ இல்லங்க )வாக நான் மட்டும்..."என்னை கட்டிக்கொண்டு பேசும் வெண்ணிலா..." என்று உரக்க பாடிக்கொண்டே மிதித்தேன்....

இதோ..cycle stand இல் நுழைந்து விட்டேன்.... வழக்கமாக Standஇன் ஒரத்தில் இருக்கும் "பன்னீர் புஷ்பங்களை" (school ஜோடி) காணவில்லை.. பின்னர் ஒய்யாரமாய் cycleஇல் சாய்ந்து கொண்டே phoneஇல் அரட்டை அடித்து கொண்டு இருக்கும் "குட்டை பாவாடை புகழ் "சரிகாவை" யும் காணவில்லை. என் Cycle வழக்காமாய் நிறுத்தும் இடத்தில் வந்ததும் நின்று கொண்டது.

தினமும் காலை இடம் இல்லாமல் cycleஐ திணித்து சொருக வேண்டி இருக்கும் .ஆனால் இன்று வெறிச்சோடி கிடந்தது..என் Cycle எப்பொழுதும் ஒரு RedColor Heroin cycle ஓடு உரசி கொண்டு தான் நிற்க்கும்...ஆனால் இன்று அந்த Cycle ஐ காணவில்லை.. Cycleஐ நிறுத்தி விட்டு 2 அடி நடந்து திரும்பி பார்த்தேன். "தன் காதலி இல்லாததால் கவலையோடு என் Cycle Handbar ஐ திருப்பிக்கொண்டிருந்தது."

cycle standஐ விட்டு இறங்கியதும் "FamilyMart" வரும்..அங்குள்ள கடிகாரம் தான். நான் ஓட வேண்டுமா?, நடக்க வேண்டுமா? என்று திர்மானிக்கும். கடிகாரத்தை எட்டிப்பார்த்தேன். கடிகாரம் "ஓடு வேகமாக ஓடு" என்றது. நடக்கும் பாதை Railway Track க்கு பக்கதிலேயே இருப்பதால் தூரத்தில் 7:59 Trainன் வருவது தெரிந்தும, "ஓடும் வேகத்தை கணிசமாய் குறைத்து கொண்டேன்.. Staion க்குள் என் "TrainPass" முதலில் நுழைய பின்னர் நான் நுழைந்தேன்.

Station இல் கூட ஆச்சரியம். வழக்கமான கூட்டம் இல்லாமல் ஏனோ பேருக்கு அங்கும் இங்கும் மக்கள் இருந்தனர்.. "அப்ப்படா...என்று ஒரு" நிதானம் அனைவர் முகத்திலும் இருந்தது போல் தெரிந்தது.."மைதாமாவு " station ( நெஜமா அப்படி ஒரு Station இருக்குங்க..நம்புங்க) வந்ததும் உட்கார கூட இடம் கிடைத்தது என்றால் மிகவும் அதிசியம் தான்..

இன்று போல் நான் பார்த்ததே இல்லை...நினைத்துக்கொண்டேன்..பழைய கதைகளை.. "கூட்டத்தில் நிற்க கூட இடம் கிடைக்காது. "யப்ப்பா..சாமி.. போதும் டா.. கொஞ்சம் காத்தாவது வரட்டும் " என்று பொறுமிவிடுவேன். .Train ஐ விட்டு இறங்கும் போது கேக்கவே வேண்டாம்.."முந்திரிகொட்டை மாதிரி என் பை மட்டும் முன்னால் போகும்.. யாராவது இழுத்துக்கொண்டு போய்விடுவார்கள்.. நான் பின்னால் ஓட வேண்டிவரும்".. ஆனால் இன்று என் பை என்னை கட்டிப்பிடித்து சமத்தாயிருந்தது...என்னை சுற்றி யாருமே இல்லை...Train அழகாய் கிளம்பியது.

3 Trian பிடித்து எப்படியோ Office இல் நுழைந்தேன்.. .வழக்கமாக எனக்கு "ohayo gozaimasu" ( GoodMorning) சொல்லும் Receptionist "கண்ணம்மாவை" காணவில்லை... அந்த இடத்தில் தொந்தியும் தொப்பயுமாய் 40 வயது பெருசு ஒன்று இருந்தது.. நான் வெறும் கடனுக்காக தலையை மட்டும் ஆட்டினேன். என் Department ல் கூட பல தலைகளை காணவில்லை. 7:30 மணிக்கே Office வந்து எப்பொழுதும் மூக்கு உறிஞ்சுகொண்டே இருக்கும் "Punctual பரமசிவத்தயும்" காணவில்லை, வெறும் Excel ஐ மட்டும் வைத்து கொண்டு படம் காட்டும் "Sincere சிகாமணீ" யும் காணவில்லை.. எனக்கு ஆச்சரியங்கள் அடுக்.அடுக்காய் வந்தது..

என் கடையை ஆரம்பித்தேன்..."MailBox" ல் முதல் முதலாக "Meeting Advanced" என்று "சொட்டைதலை PM" இன் mail இருந்தது..open செய்தேன்... ஒட்டை English இல் "Many People New year Leave from tomorrow. Meeting advanced" என்றது அது...

எல்லாம் புரிந்தது போல் இருந்தது.. எனக்கு விடுமுறையால் சந்தோஷம்..ஆனால் என் Cycleக்கோ இனி "ஒரு கணம் ஒரு யுகமாக இருக்கக்கூடும்"...10 நாள் விடுமுறையில் தன் காதலியை பார்க்கமுடியாமல் போவதால்..

பி.கு : இன்று முதல் ஜப்பானில் பெரும்பாலான அலுவலகங்களுக்கு "புத்தாண்டு விடுமுறை" தொடங்கிவிட்டது...

அனைவருக்கும் "புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்"..